×

விரைவில் கொண்டு வர திட்டம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களின் மன அழுத்தங்களை போக்குவதற்காக பல்வேறு மாற்றங்களை தேர்வு முறைகளில் சிபிஎஸ்இ செய்து வருகிறது. அதன்படி பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்தி மாணவர்களின் சுமையைக் குறைத்தது. இதனால் மாணவர்கள் பதற்றம் இல்லாமல் தேர்வுகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்பு இருந்தது போல ரிவிஷன் தேர்வு எழுதும் முறையை கொண்டு வர சிபிஎஸ்இ முயற்சித்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவியருக்கு 2025ம் ஆண்டு பொதுத் தேர்வு நடக்கும். அந்த பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், இரண்டு பொதுத் தேர்வுகளை எழுதும் முதல் தொகுதி மாணவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தைப் போக்க பல்வேறு நடைமுறைகள் சிபிஎஸ்இ வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரே தேர்வு என்பதால், இந்த அழுத்தம் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், முதல் பொதுத்தேர்வில் ஒரு மாணவர் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று உறுதியாக இருந்தால், அவர் இரண்டாம் பொதுத்தேர்வை எழுதுவதிலிருந்து விலக்கும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023ல் உதயமானது. இது குறித்து ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு நேர்காணலில், 2024 – 25ம் கல்வியாண்டு முதல் ஒரு கல்வியாண்டில் இரண்டு தேர்வுகள் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒருவர், முதல் பொதுத் தேர்வை நன்கு எழுத முடியும் என்று முடிவெடுத்தால், அவர் இரண்டாவது பொதுத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்குப் பெறலாம் என்றும், இரண்டு தேர்வுகளும் கட்டாயமாக்கப்படாது என்றும் அப்போது பிரதான் தெரிவித்திருந்தார். அதாவது, முதல் பொதுத்தேர்வு 2024ல் நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பொதுத் தேர்வு 2025 பிப்ரவரி – மார்ச் மாதங்களிலும் நடைபெறும் என்றும், இவ்விரண்டு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எதில் கிடைக்கிறதோ, அதை இறுதித் தேர்வாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

The post விரைவில் கொண்டு வர திட்டம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு appeared first on Dinakaran.

Tags : CBSE ,CHENNAI ,
× RELATED சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்?